ஆனைமலை;ஆனைமலை அடுத்த கோட்டூரில், அரசு நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு, 139 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியத்தில் ஆண்டுதோறும், இரண்டு போகத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.
நடப்பாண்டு முதல் போக சாகுபடி முடிந்து, கடந்த ஒரு மாதமாக அறுவடைப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனைமலை பகுதி விவசாயிகளுக்காக, முதற்கட்டமாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், செப்., 21ம் தேதி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.அரசு நிர்ணயித்துள்ள புதிய விலையான, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, 2,067 ரூபாய், பொது ரக நெல் குவிண்டாலுக்கு, 2,015ம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கோட்டூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியதும், கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், கோட்டூர் சந்தைப்பேட்டை வளாகத்தில், நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
கோட்டூர், காளியாபுரம், ரமணமுதலிபுதுார் உள்பட பல பகுதி விவசாயிகள் நெல்லை விற்பனை கொண்டு வருகின்றனர். கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'கோட்டூரில் கொள்முதல் நிலையம் துவங்கி கடந்த, இரண்டு நாட்களில், 94 டன் சன்ன ரகம், 45 டன் குண்டு ரகம் என மொத்தம், 139 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.மழை பெய்வதால், ஆனைமலை மற்றும் கோட்டூர் கொள்முதல் நிலையங்களில், நெல்லை பாதுகாக்க 'பாலித்தீன் ஷீட்'கள் விரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.