ராமநாதபுரம் : ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 197 நாட்டு கொடிகளுடன் ராணுவ வீரர் கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொண்டுஉள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 33. அசாம் ராணுவ முகாமில்பணியாற்றுகிறார். இவர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.அக்.16ல் ராமேஸ்வரத்தில் நடைபயணம் துவக்கினார். இதற்காக அவர் நீளமான டிரை சைக்கிளில் 197 நாட்டு கொடிகளை கட்டி அதை தன்னுடன் இழுத்துச்செல்கிறார்.
நேற்று ராமநாதபுரம் வந்த பாலமுருகன் கூறியதாவது: கொரோனா அதிகரித்த காலத்தில் தங்களின் உயிரை பொருட்படுத்தாது அனைத்து நாட்டு பிரதமர்கள், தலைவர்கள், மாநில முதல்வர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், ராணுவத்தினர், போலீசார், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிற துறையினர் பாடுபட்டனர்.அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் 197 நாடுகளின் தேசிய கொடிகளை டிரைசைக்கிளில் கட்டி ராமேஸ்வரத்தில் துவங்கி அயோத்தி வரை நடைபயணம் செல்கிறேன்.
இது பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, என்றார்.ராமநாதபுரம் வந்த பாலமுருகனை சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது வரவேற்று முகக்கவசம் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் வரவேற்று வாழ்த்தினர். அப்போது பொதுமக்களிடம் பேசிய பாலமுருகன், அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், என்றார்.