வளம் பெறுமா காரங்காடு சூழல் சுற்றுலா மையம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வளம் பெறுமா காரங்காடு சூழல் சுற்றுலா மையம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 அக்
2021
10:39
பதிவு செய்த நாள்
அக் 19,2021 23:55

ராமநாதபுரம் : கடலுார் மாவட்டம் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் நிறைந்த சதுப்பு நிலப்பகுதி கொண்டது. இதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு சூழல் சுற்றுலா மையம் விளங்குகிறது.


இங்கு படகுசவாரி செய்தவாறு மாங்குரோவ் காடுகளை(அலையாத்தி காடுகள்) ரசிப்பதற்கென்றே சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும்.தற்போது இந்த சூழல் படிப்படியாக மாறி வருகிறது. வனத்துறையில் நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் கூடுதல் வசதிகளுக்கான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள அழகிய மீனவர் கிராமம் காரங்காடு. இங்குள்ள கடலில் அலையாத்தி காடுகள் வளர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.


ராமநாதபுரத்தில் இருந்து 40 கி.மீ.,ல் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி கிராம சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி சிறிய சாலையில் 5 கி.மீ., பயணித்தால் அழகிய காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தை அடையலாம்.இங்கு200 ஏக்கரில் எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள் உள்ளன.இவற்றைரசிக்க கடலுக்குள் 3 கி.மீ., படகில் பயணம் செய்ய வேண்டும். இதற்கெனபடகு ஓட்டுவதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளனர்.


இங்குபடகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் குதுாகலமடைகின்றனர். சிறுவர்களுக்காக ஹயாக்கிங்' என்ற துடுப்பு படகு சவாரியும் உள்ளது.படகு சவாரியின் போது மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை நீரில் மூழ்கி கண்டுகளிக்கலாம். படகு பயணத்தில் இருபுறமும் அலையாத்தி காடுகளை ரசிப்பதோடு,சதுப்பு நிலப் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, குதிரை தலை கோட்டான், கோட்டான், ஆலாக்கள், கடல் புறாக்கள், செந்நாரை, பவளக்காலி உள்ளிட்ட பறவைகள் கூட்டம் கூட்டமாக நீந்தி செல்வதை ரசிக்கலாம்.


கடற்பாசிகள், புற்கள், நட்சத்திர மீன்கள், வண்ண மீன்கள் உள்ளிட்ட அபூர்வ கடல்வாழ் உயிரினங்களை கடலுக்குள் மூழ்கி கண்டுகளிக்க பிரத்யேக முகக்கண்ணாடி, ஆக்சிஜன்கருவிகள் வழங்கப்படுகின்றன.


சுவையான மீன் உணவு


அலையே இல்லாதகாரங்காட்டில்படகு சவாரிக்கு பின் பசியோடு வந்தால் அங்கே கணவாய் மீன் கட்லெட், பொறித்த மீன், மீன் குழம்பு, நண்டு வறுவலுடன் சுவையான மீன் சாப்பாடு கிடைக்கும்.ஆனால் இதற்காக நாம் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் எத்தனை பேருக்கு சாப்பாடு தேவை என்பதற்கு ஏற்ப அவர்கள் பிரஷ் மீன்களை வாங்கி சமையல் செய்து தர வசதியாக இருக்கும். இதுபோல் மதிய உணவை மகிழ்ச்சியாக ருசிக்க 75987 11620 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


நடை பாலம் சேதம்
எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட நடைமேடை பாதை சேதமடைந்துள்ளதால் அலையாத்தி காடுகளின் நடுவே நடந்துரசிக்க முடியாத நிலைஉள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி சுற்றுப்புற அழகை ரசிக்க முடியாத நிலையில்சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.


சொகுசு படகுகள் தேவை


புகழ்பெற்ற காரங்காடு சுற்றுலா மையத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த படகுகளில் வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பாதுகாப்பான நவீன கூரை வசதியுடன் கூடிய படகுகளை இயக்க வேண்டும்.


பிச்சமூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையம்


ஏர்வாடியை அடுத்த பிச்சைமூப்பன் வலசை கடலில் இயற்கை மணல் திட்டை மையாகமாகக் கொண்டு 2021 ஜன.,29ல் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் பிச்சைமூப்பன் வலசை மணல் திட்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் துவக்கப்பட்டுள்ளது.கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக திகழும் மன்னார் வளைகுடாவின் ஒரு பகுதியான பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் இருந்து கடல் மார்க்கத்தில் 1.2 கி.மீ.,ல் நண்டாம் ஜல்லி என்ற மணல் திட்டு அமைந்துள்ளது.இந்த மணல் திட்டை சுற்றிலும்பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள், பாசிகள், தாவரங்களை கண்ணாடி இழைபடகில் கண்டு ரசிக்கலாம்.


6 முதல் 7 அடி ஆழத்தில் பவளப்பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. பவளப்பாறைகளின் இடையே வண்ண மீன்கள் அங்குமிங்கும்அலைபாய்வதை கண்டு ரசிக்க கண்கள் கோடி வேண்டும்.அழகிய சவுக்கு மரத்தோட்டம்,இயற்கை அழகுடன் கூடிய ரம்மியமான நீண்ட கடற்கரை,கடற்கரையில் இருந்து கண்ணுக்கு எட்டும் தொலைவில் ஆனைபார் தீவு,வாலிமுனை தீவுகள் அமைந்துள்ளன.படகு குழாமில் இருந்து 12 பேர் அமர்ந்து செல்லும் வகையில் ஒரு படகில் மணல் திட்டு வரை அழைத்து செல்கின்றனர். இதற்கென படகு ஓட்டுவதில் சிறப்பு பயிற்சி பெற்ற நான்கு படகு டிரைவர்கள் உள்ளனர்.


மணல் திட்டை 15 நிமிடங்களில் அடைந்த பின் அங்கிருந்து கடலுக்கு அடியில் பார்க்கும் வகையில் படகின் அடிப்பகுதியில் கண்ணாடி பொருத்தப்பட்ட படகில் மணல் திட்டை சுற்றிலும் உள்ள பகுதியில் வலம் வரலாம். இதற்காக சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகும்.மணல் திட்டை சுற்றிலும் படகை மெதுவாக நகர்த்துகின்றனர்.


அப்போது கண்ணாடி வழியாக 5 முதல் 7 அடி ஆழத்தில் வளர்ந்து இயற்கை அரணாக விளங்கும் பவளப்பாறைகளை பார்த்து ரசிக்க வைக்கின்றனர். மனிதனின் மண்டை ஓடு வடிவிலும், கை விரல்கள் போலவும் அதிகமாக உள்ளன. மேலும் கவரி மான் கொம்புகளை போல் அழகிய பவளப்பாறைகள் மிக அதிகமாக உள்ளன. இவை ஓராண்டிற்கு 2 செ.மீ., வரைதான் வளர்கின்றன. டேபிள் பவளப்பாறைகளும் உள்ளன.பழுப்பு பாசிகள், பச்சைப் பாசிகள் அதிகம் உள்ளன. பவளப்பாறை, பாசிகளுக்கு நடுவே வண்ண வண்ண மீன்கள் சுற்றி வலம் வருவதையும் கண்டு ரசிக்கலாம். சில நேரங்களில் கடல் ஆமைகள், டால்பின் மீன்கள் நாம் செல்லும் பகுதியில் வருவதுண்டு என பணியாளர்கள் தெரிவித்தனர்.


நபருக்கு ரூ.200 கட்டணம்


இங்கு படகு சவாரி சென்று பவளப்பாறைகளை கண்டு ரசிக்கநபருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகில் 12 பேர் ஏற்றப்பட்டு அனைவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது.கிழக்கு கடற்கரை சாலையில் ஏர்வாடியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ.,ல் பிச்சமூப்பன் வலசைஅமைந்துள்ளது. இங்கு செல்ல விரும்புவோர் ஏர்வாடியில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம்.வாரத்தில் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள். மற்ற நாட்களில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகள் பூலோக சொர்க்கமாக காட்சியளிக்கின்றன.


வளர்ச்சிக்கு திட்டங்கள் உள்ளன.. நிதி இல்லையே...

சூழல் சுற்றுலா மையங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, காரங்காட்டில் கடல் பேக்வாட்டர் அதிகரிக்கும் போது, மழை காலங்களில் சேறும் சகதியாகும் என்பதால் மாங்குரோவ் காடுகளுக்கு நடுவே உள்ள நடைபாதையில் செல்ல முடியாது. இதனால் வாச் டவருக்கும் போக முடியாது.இதற்காக எப்போதும் பயணிகள் சென்று வரும் வகையில் ரூ.15 லட்சம் செலவில் நடைமேடை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிதியின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நடைமேடை வசதி இருந்தால் எல்லா நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.


இங்கு பேக் வாட்டர் அடிக்கடி குறைவதால் சில நேரங்களில் 2 அடி, 3 அடி ஆழம்தான் கடலில்இருக்கும். இதனால் பேக்வாட்டரில் பயன்படுத்தும் வகையிலான எடை குறைந்த நவீன கண்ணாடி இழை படகுகள் வழங்க வேண்டும்.வெளிப்புறம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்குகுழந்தைகள் பூங்கா அமைக்கும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. இதுபோல் நடைமேடை, குழந்தைகள் பூங்கா, நவீன படகுகள் இயக்குவது, கொடைக்கானல் போன்று பெடல் படகுகள் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.இவற்றை நிறைவேற்ற குறைந்தது 3 முதல் 4 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் வனத்துறையில் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் அல்லது2 லட்சம் வரை தான் ஒதுக்கப்படுகிறது. இதில் பராமரிப்பு பணிகள், கழிப்பறை வசதிகளுக்கே சரியாகிவிடுகிறது.மாவட்ட நிர்வாகம் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,என்றார்.-


தேவை என்ன


பிச்சமூப்பன் வலசை சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்ல சரியான சாலை வசதி வேண்டும். கடற்கரை செல்ல வசதியாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு வசதியாக கூடுதல் கழிப்பறைகள், ஓலை குடில்கள், குடிநீர் வசதி செய்தற்காக இருமுறை ரூ.10 லட்சம், ரூ.25 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பியும் எந்த பலனும் இல்லை


.வனத்துறையில் நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில், சுற்றுலாத்துறை இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. பிச்சமூப்பன் வலசை சுற்றுலாப்பகுதிக்கு செல்ல மற்றொரு மாற்று வழியாக சடையன்குடில் வலசை பாதையை பயன்படுத்தலாம். இங்குள்ள நீண்ட கடல் பகுதியில் கூடுதல் வசதிகளை செய்வதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். மேலும் இப்பகுதியில் உள்ள தீவுகளை சுற்றிப்பார்க்கவும், திட்டங்களை தீட்ட வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி ஏற்படும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X