20 ஆண்டாகியும் சீரமைக்காத பூங்கா; ஆக்கிரமிப்பில் சுருங்கிய 40 அடி ரோடு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
20 ஆண்டாகியும் சீரமைக்காத பூங்கா; ஆக்கிரமிப்பில் சுருங்கிய 40 அடி ரோடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:46

சிவகாசி : 20 ஆண்டாகியும் பராமரிக்கப்படாத சிறுவர் பூங்கா, ஆக்கிரமிப்பில் சுருங்கிய 40 அடி ரோடு என சிவகாசி தென்றல் நகர் குடியிருப்பு வாசிகள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.



இந்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் விஜயசேகரன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சந்திரசேகரன், உறுப்பினர்கள் ராஜ்குமார் வர்மா, ஜெயப்பிரகாஷ், அய்யப்பன் கூறியதாவது: தென்றல் நகரில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சிறுவர் பூங்கா 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. பூங்கா முழுவதுமே முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் இப்பகுதி குழந்தைகள் விளையாட இடம் இல்லை. பூங்காவில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்கள் இருப்பிடமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. இவைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதியில் நடமாடி அச்சத்தை ஏற்படுத்துகிறது.இப்பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பை ரோட்டிலே கொட்டப்படுகிறது. மேலும் இப்பகுதி தனியாக இருப்பதால் பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. தென்றல் நகரின் மையத்தில் உயர் கோபுர மின் விளக்கு, தெருக்களில் கூடுதல் தெரு விளக்குகளும் அமைக்க வேண்டும். இதே பகுதியில் அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. இரவில் டூ வீலரில் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர். தென்றல் நகரில் 40 அடியாக இருந்த ரோடு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு 20 அடியாக சுருங்கிவிட்டது. நகருக்கு வரும் முக்கிய வழியான ரயில்வே பீடர் ரோடு முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதில் சென்று வரும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது. ரோட்டினை சீரமைக்க டெண்டர் விடப்படும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. இதே ரோட்டை யொட்டி செல்லும் ஓடை துார்வாரப்படாமல் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தென்றல் நகரில் சில தெருவில் சாக்கடை வசதி இல்லை. இருக்கிற சாக்கடையும் துார்வாரப்படவில்லை. சாக்கடையை துார்வாரி கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X