காரைக்கால் : காரைக்காலில், ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், சார்பதிவாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், நெடுங்காடு அன்னவாசல் சாலையை சேர்ந்தவர் குமார்ஆனந்த்(53). இவர் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார்.நெடுங்காடு பருத்திக்குடி பகுதியில் இவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 27 ஏக்கர் நிலம், உறவினர் குணசேகரன் பராமரிப்பில் உள்ளது.இந்நிலையில், குமார்ஆனந்த் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, அவரது நிலத்தை வேறு நபருக்கு 7.9.2021ல் திருநள்ளாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதையறிந்த குணசேகரன் அளித்த புகாரின்பேரில் , திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தினர். மோசடி தொடர்பாக, நெடுங்காடு வடமட்டம் பாஸ்கரன், செருமாவிலங்கை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், அவரது மனைவி விஜயா, தேவராஜ், அப்துல்காதர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.தேவராஜ்(73), பாஸ்கரன்,41, அப்துல்காதர் 45, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இளங்கோவன்,46, விஜயா, சார்பதிவாளர் ஜெயக்குமார்,50, ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.