புதுச்சேரி : தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், மாநிலத்தில் கொரோனா மூன்றாம் அலை தவிர்க்கப்பட்டு உள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.
வில்லியனுார் அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை நேற்று துவக்கி வைத்தார்.சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, தடுப்பூசி பிரிவு துணை இயக்குனர் ராஜாம்பாள், செய்தி கல்வி தொடர்பு துறை துணை இயக்குனர் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரேமா, இந்துஜா உள்ளிட்டோர் செய்தனர்.நிகழ்ச்சியில், கவனர் தமிழிசை அளித்த பேட்டி:மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் 33 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். சில தனிப்பட்ட காரணத்தாலும், அண்மையில் கொரோனா வந்து குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.இந்த 33 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நுாறு சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமமாக மாறும். அவர்களது வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ள 99 சதவீத நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.கொரோனா அவசர கால நோயாக மட்டுமின்றி, எப்போதும் இருக்கும் நோயாக மாறக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.கொரோனா எப்போது வேண்டுமானாலும் நம்மை தொற்றிக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் தடுப்பூசி மிகமிக அவசியம். மற்றவர்களுக்கு தொற்று பரவ நாம் காரணமாக இருக்கக் கூடாது. குடும்பத்தின் நலன் கருதி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.மாநிலத்தில் இதுவுரை 7 லட்சத்து 13 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஒரே நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்திட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளேன்.
மீதமுள்ள 2 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி விட்டால் புதுச்சேரி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாறும். இது பெருமைக்காக அல்ல. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. தீபாவளிக்கு முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பயமின்றி பண்டிகையை கொண்டாடலாம். கொரோனா மூன்றாவது அலை வருவதிலிருந்து நாம் தப்பித்து இருக்கிறோம். அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதே இதற்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.