புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரம் | செய்திகள் | Dinamalar
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:06

புதுச்சேரி : புதுச்சேரியில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் அதே வேளையில், டெங்கு மற்றும் சிக்குன் குன்யா காய்ச்சல் அதிகரித்து வருவது,



மக்களை அச்சமடையச் செய்துள்ளது.புதுச்சேரியில், கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. அதை தொடர்ந்து, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.டெங்கு பரவல் இந்நிலையில், கொசுவால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் புதுச்சேரி பிராந்தியத்தில் அங்கொன்று, இங்கொன்றாக பாதிப்பு ஏற்பட்டு வந்தது.



கடந்த செப்டம்பர் மாதம் முதல், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதனால், செப்டம்பர் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 130 பேரும், இந்த மாதத்தில் நேற்று முன்தினம் வரை 140 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உச்சகட்டமாக, கடந்த 14ம் தேதி ஜிப்மர் டாக்டர் மற்றும் மாணவர் விடுதியில் 18 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, ஒயிட் டவுன் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த ஜனவரி முதல், நேற்று முன்தினம் வரை 595 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கள ஆய்வு தீவிரம்அதனைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட சுகாதாரத் துறையினர், மேற்கண்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் பெரும்பாலான வீடுகளில் குடிநீர் தொட்டிகளை திறந்த வைத்திருப்பதால், அதில் 'ஏடிஸ்' ரக கொசு உற்பத்தியாவதை கண்டுபிடித்து, அதன் 'லார்வா'புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.



டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதன் அறிகுறிகள், சிகிச்சை முறை, தடுப்பு முறை குறித்து விளக்கி, கொசு உற்பத்தியை தடுத்திட, வீட்டை சுற்றி தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்கி இருப்பதை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். இப்பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து இல்லை. அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், நோய் தீவிரமடைந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிக்குன் குன்யா டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் அதே நேரத்தில், சிக்குன் குன்யா காய்ச்சலும் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்தாண்டில் நேற்று முன்தினம் வரை 123 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 பேர் கடந்த 48 நாட்களில் (செப்டம்பர் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை) இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் பாதிப்பு அதிகம்புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டில் நேற்று முன்தினம் வரை 595 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 559 பேர் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். 25 பேர் காரைக்கால் பிராந்தியத்திலும், 8 பேர் மாகியிலும், 3 பேர் ஏனாமிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இதேபோன்று இந்தாண்டில் நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் 123 பேர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 121 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். இருவர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர்.மக்கள் ஒத்துழைப்பு தேவை புதுச்சேரி மாவட்டம் மொத்தம் 290 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இந்த ஒட்டுமொத்த பரப்பளவையும் சுகாதாரத் துறையினர் கள ஆய்வு செய்வது கடினம். எனவே, பொது மக்கள் சமுதாய நலன் கருதி, தங்கள் வீட்டின் சுற்றுப் புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பா, ஆட்டுக்கல், கண்ணாடி பாட்டில் போன்றவற்றில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.குடிநீர் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X