கழிவுநீர் கலப்பால் மாசு; விழி பிதுங்கி நிற்கும் பெரியகுளம் கண்மாய் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
கழிவுநீர் கலப்பால் மாசு; விழி பிதுங்கி நிற்கும் பெரியகுளம் கண்மாய்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
04:26

ராஜபாளையம் : ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் கொல்லன் கொண்டான் பெரியகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பால், விவசாயிகள் மட்டுமல்லாது இதை சுற்றி உள்ள கிராம மக்களும் தொடர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் பெரிய குளம் கண்மாய்தான் பரப்பளவில் பெரிய கண்மாயாக உள்ளது. இக்கண்மாயில் இருந்து அயன் கொல்லன் கொண்டான்,நக்கனேரி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் பகுதியில் உள்ள 20-க்கு மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் சுந்தரநாச்சியார்புரம், சோலைச்சேரி, கிருஷ்ணாபுரம், அயன் கொல்லன் கொண்டான், நக்கனேரி ஊராட்சிகளுக்கு குடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. முக்கோண வடிவில் கரைகளை கொண்ட பெரியகுளம் கண்மாயில் மேற்குபுரம் ராஜபாளையம் தென்காசி ரோட்டில் தொடங்கி கிருஷ்ணாபுரம் வழியாக தளவாய்புரம் ரோட்டில் முடிவடைகிறது.கண்மாய்க்கு அய்யனார் கோயில் ஆற்று தண்ணீர் ,அலப்பசேரி , சேத்துார் பிளாவடி கண்மாய்களின் உபரி நீர் வருகிறது.சேத்துார் பிளவாடி கண்மாயின் உபரிநீர் வரும் வழித்தடத்தில் தனியார் ஆலை கழிவு நீரும், தளவாய்புரம் பகுதி ஆலைகளின் கழிவு நீரும், சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் வடக்குதெரு, தெற்கு தெரு பகுதி குடியிருப்பு கழிவு நீர் ,சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் கிராமங்களின் கழிவுநீர் ஆண்டுக்கணக்கில் கண்மாயில் விடப்படுகிறது.இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது. தற்போது கண்மாயில் பன்றி, மாடு, நாய் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ப்புக்காக குடில்கள் முளைத்து வருவதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.பழங்கதையாகி விட்டதுமுத்துச்சாமி, விவசாயி: இக்கண்மாய் நீரை அனைத்து உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தோம். குறிப்பாக குடிநீரில் தொடங்கி விவசாயம் வரை நடந்தது. பருவ வயதில் குளித்து மகிழ்ந்தோம். தற்போது இந்த நீரில் உடலை நனைப்பது கூட பிரச்னை ஏற்படுகிறது. கழிவு நீர் கலப்பால் உடல் முழுவதும் அரிப்பு போன்ற பல்வேறு தோல் பிரச்னை ஏற்படுகிறது. --விலைக்கு வாங்குகிறோம்--அமல்ராஜ், சமூக ஆர்வலர்: மற்ற பகுதியினர் தண்ணீல் செழிப்பில் எங்கள் கிராமத்தை வியந்து பார்த்த நிலை தற்போது மாறி விட்டது. படிப்படியாக நிலத்தடி நீரின் தன்மை மாறி உவர்ப்பு நீராக மாற, குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அரிசிக்கு விலையில்லை மணி, விவசாயி: எங்கள் கிராம பகுதியில் விளைந்த நெல்லிற்கு வியாபாரிகளிடம் போட்டிகள் அதிகமிருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரில் நடக்கும் விவசாயத்தால் அரிசியின் தரம் மோசமான நிலையை எட்டி விட்டது. இதில் செய்யப்படும் உணவும் குழைவுத்தன்மையுடன் தாங்குதிறன் இழந்து விரைவில் கெட்டு விடுகிறது. வியாபாரிகளிடம் ஆர்வம் குறைந்து அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு படையெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.--ஆலைக்கழிவுகளால் தொல்லை--தங்கையா, விவசாயி: தளவாய்புரம் பகுதியிலிருந்து 10 க்கு மேற்பட்ட நெல் அரவை ஆலைகளில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன கழிவு நீர் நேரடியாக கண்மாயில் விடப்படுகின்றன.இவற்றில் கால் வைத்தாலே அழுகியது போன்ற துர்நாற்றம் ஏற்படுகிறது. இவை நிலத்தடி நீரில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு , விவசாய பயிர்களுக்கு பாய்ச்சும் போது மகசூல் பாதிப்பும் உள்ளது. ஒரு சிலரின் கட்டுப்பாடில்லாத செயல்களால் ஆண்டாண்டு காலமாக பிரச்னையின்றி நடந்த விவசாயம், குடிநீர், பாசனம் உள்ளிட்டவற்றால் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது.தீர்வு காணப்படும்சந்திரமோகன், உதவி பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை: கலெக்டரின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் படி விரைவில் இக்கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. சிவகாசியை சேர்ந்த தன்னார்வலர்கள் குழு இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X