கடலுார்-கடலுாரில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.தமிழ்நாடுஅரசு 'இல்லம்தேடிக் கல்வி' என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல். பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்களின் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.மாணவர்கள் பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை 'இல்லம் தேடிக் கல்வி' திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் போன்றவையாகும்.இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு தினமும் மாலை 5 முதல் 7 மணிக்குள் தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாடகற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில் கிராம அளவில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பேரணி, வீதிநாடகம், பொம்மலாட்டம், கதைசொல்லுதல், திறன்மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவை நடைபெறவுள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் எல்லப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், இளஞ்செழியன், அந்தோணிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கலைக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.