கோவை : கோவையில் இரிடியம் கலந்த கலசம் விற்பதாக கூறி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் சிக்கியது.
கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் ஒரு வீட்டில், உடுமலையை சேர்ந்த ரோஜராஜ், 42, கிணத்துக்கடவை சேர்ந்த முருகேசன் 36 ஆகியோர் தங்களிடம் இரிடியம் கலந்த கலசம் இருப்பதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் கூறி மோசடி வியாபாரம் நடத்துவது, செட்டிப்பாளையம் போலீசாருக்கு தெரியவந்தது.கேரளாவை சேர்ந்த அப்துல் கலாம்,44, மரூபி, 58 ஆகியோர், கலசத்தை பெறுவதற்கு பல கட்டங்களாக, 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், இரிடியம் கலசத்தை தரவில்லை. இதனால், பணத்தை திரும்ப தருமாறு அப்துல்கலாம், மரூபி ஆகியோர் கேட்டுள்ளனர்.
நேற்று இருவரையும் ஒத்தக்கால்மண்டபம் வரவழைத்த ரோஜராஜ், முருகேசன் ஆகியோர் ஒரு கலசத்தை காட்டியுள்ளனர். அங்கிருந்த வேலுாரை சேர்ந்த தினேஷ் என்பவரை, 'டெஸ்டிங் ஆபீசர்' எனக் கூறியுள்ளனர். தங்கள் பாதுகாப்புக்காக கோவையை சேர்ந்த செந்தில்குமார், 41, வெங்கடேஷ், 24 ஆகியோரை அழைத்து வந்துள்ளனர்.போலீசார் அதிரடியாக சென்று, அங்கிருந்த எட்டு பேரை கைது செய்தனர். 85 லட்சம் ரூபாய் நகல் எடுக்கப்பட்ட நோட்டுக்கள், கலசம் பறிமுதல் செய்யப்பட்டன.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.