சென்னை:தென்மேற்கு பருவ மழை விலக உள்ள நிலையில், வட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து உள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை ஜூன் 3ல் துவங்கி, நாடு முழுதும் பரவலாக பெய்துள்ளது. சில வாரங்களாக தென் மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.இதற்கிடையில், தென் மேற்கு பருவ மழை இறுதிக் கட்டத்தை எட்டியதால், தமிழகத்தில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சென்னை வானிலை மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வரும் 24, 25ம் தேதிகளில் கன மழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.