புதுச்சேரி-சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பில், இறைச்சியில் விஷம் வைத்து, 6 தெரு நாய்களை கொன்றது தொடர்பாக, இரு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு, தெரு நாய்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன.சில நிமிடத்தில் 6 நாய்கள் வயிறு வீங்கி, வாயில் நுரை தள்ளி இறந்தன.தகவல் அறிந்து வந்த விலங்குகள் நல அமைப்பினர், ஆய்வு செய்ததில், மாட்டு இறைச்சி கொழுப்பில், விஷம் தடவி நாய்கள் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.நாய்கள் சாப்பிட்டு மிச்சமிருந்த விஷம் கலந்த கொழுப்பு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.புகாரின்பேரில், கோரிமேடு போலீசார், விலங்கு வதை தடுப்பு சட்டம் 429 பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர். இறந்த நாய்கள் அதே இடத்தில் கால்நடை மருத்துவர்களால் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு, புதுச்சேரி நகராட்சி உதவியுடன் புதைக்கப்பட்டது.போலீஸ் விசாரணையில், சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்புகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் சில வாலிபர்கள், இரவில் பெட்ரோல் திருடி வந்துள்ளனர். இவர்களைக் கண்டு தெரு நாய்கள் குரைப்பதால், பெட்ரோல் திருடும்போது அடிக்கடி அப்பகுதி மக்களிடம் சிக்கி, அடிவாங்கி உள்ளனர். இதனால், இறைச்சியில் விஷம் தடவி வைத்து நாய்களை கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக, இரு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.