உடுமலை;மக்காச்சோளத்தில், புதுவகை நோய்த்தாக்குதல் குறித்து, குடிமங்கலம் வட்டார வேளாண்துறையினர், விளைநிலங்களில், நேரடி ஆய்வு செய்தனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சாகுபடியில், புதுவகை நோய்த்தாக்குதல் குறித்த செய்தி, 'தினமலரில்' வெளியானது.
இதையடுத்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார், புதுப்பாளையம், கொங்கல்நகரம் உட்பட கிராமங்களில், ஆய்வு செய்ததில், சில விளைநிலங்களில், மட்டும் இவ்வகை தாக்குதல் இருப்பதை கண்டறிந்தனர்.
வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஓரிரு வயல்களில், அசுவினி பூச்சித்தாக்குதல் கண்டறியப்பட்டது. அதிக ஈரப்பத காலங்களிலும், தழைச்சத்து அதிகமாக இடும் விளைநிலங்களிலும், இத்தாக்குதல் காணப்படும். கட்டுப்படுத்த, இமிடாகுளோரிபைட் மருந்து, 0.5 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது தயோமீத்தாக்சம் அதே அளவு, இலைகளின் அடியிலும், குருத்தை சுற்றிலும் அடித்து கட்டுப்படுத்தலாம்,' என்றனர்.