உடுமலை;உடுமலை அருகே, கிராமங்களில், பெய்த அதிக மழையால், வறண்டு கிடந்த ஓடைகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; வரலாறு காணாத மழையாக இருந்தது என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள முக்கோணம், அந்தியூர், உடுக்கம்பாளையம், பாப்பனுாத்து, சாளையூர், விளாமரத்துப்பட்டி சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம், அதி கன மழை பெய்தது.
சில மணி நேரத்தில், 150 மி.மீ.,க்கும் மேல் மழை பெய்ததால், பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல், வறண்டிருந்த ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.உடுமலை - ஆனைமலை ரோட்டில், சாளையூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தும், பல இடங்களில் ரோடுகளில் ஓடிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதித்தது. மேலும், விளைநிலங்களில், பல ஆண்டுகளுக்கு பின், மழை வெள்ள நீர் தேங்கியது.உடுக்கம்பாளையம்- கொடுங்கியம் ரோட்டில், அபரிமிதமான வெள்ளப்பெருக்கு காரணமாக, தரைப்பாலம் அடைப்பு ஏற்பட்டு, கரை அரிக்கப்பட்டது. நேற்று, குழாய் பாலத்தின் அடைப்பு ஏற்பட்டிருந்த கழிவுகள் அகற்றப்பட்டது. ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி வழிந்தது.முக்கோணம், பூலாங்கிணர் பகுதியில், வெள்ளை சோளம், காய்கறி சாகுபடி வயல்களில், வெள்ள நீர் தேங்கியது. அந்தியூர், பூலாங்கிணர் பகுதிகளில், தாழ்வான பகுதியிலிருந்த வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் அதிகளவு மழை, பல ஆண்டுகளுக்கு பின், கொட்டியுள்ளதாகவும், இதனால், வறண்டு கிடந்த ஓடைகள், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் குளிர்ந்தும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேகவெடிப்பு காரணமா?
உடுமலை அருகே நேற்றுமுன்தினம், குறிப்பிட்ட சில கிராமங்களில், கொட்டித்தீர்த்த கனமழைக்கு, மேகவெடிப்பு காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர்கள், சமூகவலைதளங்களில், பதிவிட்டிருந்தனர்.அந்த கிராமங்களில், மழை மானி இல்லாத நிலையில், மழையின் அளவு துல்லியமாக தெரியவில்லை. சில மணி நேரத்தில், அதிகளவு மழை பெய்ததற்கான காரணம் குறித்து, வானிலை ஆய்வாளர்கள்ஆய்வு செய்து விளக்கமளிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.