வால்பாறை:வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில், தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், ஆதார், இ-சேவை மையத்தில் பல்வேறு வகையான சான்றிதழ் பெறவும், தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம் பெற வயதானவர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தாலுகா அலுவலகத்துக்கு முன்பக்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட வரவேற்பு அறை இன்று வரை திறக்கப்படவில்லை.இதனால், தாலுகா அலுவலகத்துக்கு வரும் மக்கள், வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தாலுகா அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து, காட்சிப்பொருளாக உள்ள வரவேற்பு அறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை தாசில்தார் அலுவலகம் வந்து செல்லும் மக்களின் நலன் கருதி, விரைவில் வரவேற்பு அறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.