உடுமலை;கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியலை, அலுவலகத்தில் வைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்தில், அடங்கல் இல்லாமல் கடன் பெற்ற, 30 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள், தள்ளுபடி சலுகை பெற்றுள்ளனர்.
அடங்கலில் குறைபாடு இருப்பதாக, 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அரசு சலுகை கிடைக்கவில்லை.கடந்த, 4ம் தேதி, அமைச்சர் சாமிநாதனிடம் முறையிட்ட போது, அடங்கல் விவரங்களை கணக்கில் எடுக்க மாட்டோம் என்றார். கூட்டுறவுத்துறையில், அடங்கலை காரணம் காட்டி கடன் தள்ளுபடி செய்யாமல் மறுக்கின்றனர்.
வி.ஏ.ஓ.,க்கள், பயிர்க்கணக்கு எடுக்க, விளைநிலங்களுக்கு செல்லாமல், விவசாயிகள் கூறும் பயிருக்கு ஏற்ப, அடங்கல் வழங்கி விடுகின்றனர்.எனவே, அடங்கலை காரணம் காட்டி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று மறுத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். அனைவருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி சான்று வழங்கி, தள்ளுபடி பெற்றவர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலகத்தில், வைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.