ஆத்துார் : ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நிரம்பி நேற்று மறுகால் பாய்ந்தது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மணலூர், மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தாண்டிக்குடி, புல்லாவெளி, ஆடலூர் பகுதிகளை நீர்பிடிப்பாக கொண்டு, ஆத்தூர் காமராஜர் திட்டம் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்கள் இப்பகுதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதி யில் நிரம்பிய இந்த நீர்தேக்கம் போதிய நீர்வரத்து இன்றி தண்ணீர் குறைந்து வந்தது. கடந்த ஜூலையில் நீர்மட்டம் 8 அடியாக (மொத்த கொள்ளளவு 24 அடி) குறைந்திருந்தது.
சமீபத்தில் இரு வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்கிறது. பெருமளவு வரத்து நீர், பாசன குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுஉள்ளது. கூழையாறு, சில சிற்றோடைகளில் இருந்து நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.நேற்று நீர் தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டி, உபரி நீர் மறுகாலில் பாய்ந்தது. நீர் வரத்து தொடரும் சூழலில் குடகனாற்றில் தண்ணீர் செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.