மதுரை : ''மதுரை மாவட்டத்திலுள்ள தபால் அலுவலக ஆதார் சேவை மையங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ரூ.50 செலுத்தி ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து கொள்ளலாம்,'' என, கோட்ட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் e---SHRAM/NDUW இணையதளத்தில் அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை டிச.,31 க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் மத்திய அரசின் சலுகைகள் மற்றும் விபத்து காப்பீடு பெறலாம்.மாவட்டத்திலுள்ள மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் இதர 18 நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள் உள்ளடக்கிய 7.5 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தொழிலாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி., அவசியம். ஆதார் எண்ணுடன் அலைபேசிஎண் இணைக்கப்படாதவர்கள் இந்த தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.