பெலகாவி : ''நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது உண்மை தான். இதை தேவைக்கேற்ப பயன்படுத்துகிறோம். ''தற்போது உள்நாட்டிலேயே, நிலக்கரி சப்ளையாவதால் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்,'' என மத்திய சுரங்கம், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பெலகாவியின் கித்துாரில் அவர் நேற்று கூறியதாவது:கடும் மழை மற்றும் நிலக்கரி இறக்குமதி கட்டணம் அதிகரித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நம் நாட்டிலேயே தேவையான நிலக்கரி கிடைப்பதால், இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்.கித்துார் கோட்டையை தேசிய நினைவிடமாக அறிவிக்க, பா.ஜ., அரசு முன் வந்துள்ளது. மாநில அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.தார்வாட் -- பெலகாவி ரயில் திட்டத்தை இந்த அரசின் ஆட்சி காலத்திலேயே முடிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
மாநில அரசு உடனடியாக நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்க வேண்டும். 80 சதவீதம் நிலம் கொடுத்தாலும், நாங்கள் பணியை துவங்குவோம்.கித்துாரில் சர்வதேச விமாம நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. மாநில அரசு நிலம் வழங்கினால் பணிகளை துவங்குவோம். விமானங்களை பழுது பார்க்கவும், நிறுத்தவும் வசதி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.