காரைக்கால் : ''காரைக்காலில் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தி உள்ளார்.காரைக்கால் திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் தேவமணி (50); பா.ம.க., மாவட்ட செயலாளர்.கடந்த 22ம் தேதி இரவு 10.15 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்ற தேவமணியை, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து,அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதியில்பதட்டத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர், தேவமணி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பா.ம.க., தலை வர் ஜி.கே.மணி கூறுகையில், 'தேவமணி படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி கூறியதாவது:தேவமணி படுகொலை, காவல் துறை உதவியுடன் தான் நடந்துள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர். எனவே இவ்வழக்கில் காரைக்கால் காவல் துறை உண்மையை கண்டறிய முடியாது. அதனால் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசியல் படுகொலைகள் பெரிய ஜாம்பவான்கள் பின்னணியில் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு உதவியாக இருப்பவர்களை படுகொலை செய்யும் நபர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு வன்னியர் சங்கம் முடிவு கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.இடப்பிரச்னையில் தேவமணி கொலை?தேவமணி கொலை வழக்கில், திருநள்ளார் பகுதியை சேர்ந்த 28 மற்றும் 19 வயதுடைய இரு நபர்களை மயிலாடுதுறையில் பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில், இடப்பிரச்னை தொடர்பாக, தேவமணிக்கும் எதிர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னையில், கூலிப்படையை ஏவி தேவமணியை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.