சிதம்பரம் : சிதம்பரம் புத்து மாரியம்மன் கோவிலில் பூஜைப் பொருட்களை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம், பூதகேணியில் உள்ள புத்து மாரியம்மன் கோவில் நேற்று முன் தினம் காலை திறக்கப்பட்டு மதியம் மூடப்பட்டது. மீண்டும் மாலை திறந்த போது பூஜைப் பொருட்கள் வைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. கோவில் நிர்வாகி முருகவேல் சென்று பார்த்த போது, பித்தளை குத்துவிளக்கு, சர விளக்கு, தாம்பூல தட்டு, பித்தளை சொம்பு உள்ளிட்ட பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.
இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். நேற்று மதியம் வண்டிகேட் பகுதியில் நடந்து வந்த இருவரை விசாரித்தனர். இதில், சிதம்பரம், மணலுாரைச் சேர்ந்த ராம்கி, 27; அவரது மனைவி செல்வி, 25; என்பதும் பூதகேணி புத்து மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.