சிதம்பரம் : சிதம்பரத்தில் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் வீட்டில் ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம், மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 50; சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டு வாசலில் துப்புரவு பணி செய்ய வரகூர்பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பவரை வேலைக்கு அமர்த்தினார்.
நேற்று காலை சாந்தி வந்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து வந்த புகழேந்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் , ஐந்தரை சவரன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 3.50 லட்சம் ஆகும். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.