லஞ்சம் கேட்டு துணை பி.டி.ஓ., அடம்: வாட்ஸ்ஆப் ஆடியோ 'வைரல்' | சேலம் செய்திகள் | Dinamalar
லஞ்சம் கேட்டு துணை பி.டி.ஓ., அடம்: வாட்ஸ்ஆப் ஆடியோ 'வைரல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
10:36

சேலம்: சேலம், சின்னகல்வராயன்மலை, வடக்குநாடு ஊராட்சி மலைவாழ் மக்கள், போர்வெல் போட, தடையில்லா சான்று கேட்டு, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊராட்சி வார்டு உறுப்பினர் மொபைலில் தொடர்பு கொண்டு, மண்டல துணை பி.டி.ஓ., கோவிந்தராஜிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர், லஞ்சம் கேட்டு அடம் பிடிக்கும், வாட்ஸ்ஆப் ஆடியோ பேச்சு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இடையே பரவி வருகிறது. அதில், துணை பி.டி.ஓ., பேசுகையில், 'ஆண்டவர், நீங்க அனுப்பிய இரு போட்டோவை எடுத்துக்கிட்டேன். நீங்க பரிந்துரைத்த, 7 விண்ணப்பத்துக்கு, தடையில்லா சான்று வழங்க தயார் செய்திட்டு இருக்கேன். அதற்காக, 8,500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. இன்னும், 3,500 ரூபாயை வீட்டில் வந்து கொடுத்துவிட்டு, தடையில்லா சான்று வாங்கி கொள்ளலாம்' என, தெரிவித்தார். பதிலளித்த ஆண்டவர், ' நான் வார்டு உறுப்பினர், சொன்னபடி, 1,500 ரூபாய் வாங்கி கொண்டு சான்று கொடுங்கள்' என்றார். அதை ஏற்காத அவர், 'நீங்க என்னை அலைய விட்டதால், 3,500 ரூபாய் கேட்கிறேன். வேண்டுமானால், 500 ரூபாய் பிடித்துக்கொண்டு, 3,000 ரூபாய் கொடுங்கள்' என, பேசினார். ஒரு கட்டத்தில் ஆண்டவர், 'சாமிநாதன் கிட்ட மட்டும் பணம் குறைவா வாங்கியிருக்கீங்க. எங்கிட்ட பணம் கேட்பதே தவறு' எனக்கூற, துணை பி.டி.ஓ., 'சில விஷயங்களை, வெளிப்படையாக சொல்ல முடியாது, சாமிநாதன் கிட்ட, 2,000 ரூபாய் வாங்கிட்டு தான், சான்று கொடுத்திருக்கேன். எல்லா வேலைக்கும், நீ எங்கிட்ட தான் வரணும். அதை, நான் தான் செஞ்சி கொடுக்கணும்' என பதில் அளிக்க, அவர்களுக்குள் உரையாடல் நீள்கிறது. இருவருக்கும் இடையே பேரம் நடந்த ஆடியோ பேச்சு, கலெக்டர் வரை சென்றதால், ஊரகத்துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''உரையாடலை கேட்டேன். துணை பி.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X