கண்டாச்சிபுரம் : தாசில்தாரின் ஜீப்பை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக டிரைவர் சுப்புராயன். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பணியை முடித்து விட்டு, தாசில்தார் பயன்படுத்தும் பொலிரோ ஜீப்பை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். நேற்று சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை என்பதால் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டமின்றி இருந்தது.
இந்நிலையில், மதியம் 12:45 மணியளவில் அங்கு வந்த வாலிபர் திடீரென ஜீப்புக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், தப்பியோடிய வாலிபரை 5 கி.மீ., துாரம் துரத்திச் சென்று பம்பகரை அருகே பிடித்தார்
.விசாரணையில், அந்த நபர், கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித், 25; என்பதும், இவர், இதற்கு முன் 2 முறை தாலுகா அலுவலகத்தில் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் தாசில்தாரின் ஜீப்பை உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது. மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து, கண்டாச்சிபுரம் வி.ஏ.ஓ., (பொறுப்பு) அன்புவிழி கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.