மாவட்டத்தில் வேகமாக பரவுது 'டெங்கு'... உஷார் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தனம் | கடலூர் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் வேகமாக பரவுது 'டெங்கு'... உஷார் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2021
04:29

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் காய்ச்சல், சளியால் பலரும் பாதித்துள்ளனர். கை, கால் குடைச்சல், தலை சுற்றல் உள்ளிட்ட உபாதைகளும் ஏற்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.தொடர் காய்ச்சலால் பாதித்தவர்களின் ரத்தம் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஒரு மாதமாக பெய்த மழையால் டயர், உபயோகமற்ற பொருட்களில் தேங்கிய மழை நீரில் டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்து, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடலுார் மாவட்டம் முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், கடலுார் அருகே நடுவீரப்பட்டு அடுத்த ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த மாணவர் தருண், 17; என்பவர் நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு பலியானர். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு பாதித்தவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது. பலரும் சிகிச்சை முடிந்து பலர் திரும்பியுள்ள நிலையில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர் இறந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். மாணவர் இறந்த பகுதியில் மட்டும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். கொசு ஒழிப்பாளர்கள் மூலம் மருந்து தெளிப்பது, கொசுப்புழு வளராமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்கமாக மேற்கொள்ளும் பணிகள் ஏதும் நடக்கவில்லை. குறிப்பாக நோய் பாதித்தவர்களுக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்காமல், ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரு பகுதியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.அந்த இடத்தை மட்டும் சுற்றிலும் கொசு வலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற நோயாளிகளுக்கம் நோய் பரவும் அபாயம் ஏற்படும். கொரோனா பரவலில் இருந்து மீளாத நிலையில், டெங்கு காய்ச்சலும் பரவி பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை சீசனில் டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், டெங்கு பாதிப்பை தடுக்க மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும்,நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தினமும் சேரும் குப்பைகளை முறையாக அகற்றவும், பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X