மானாமதுரை : மானாமதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக அரசு பணிமனைக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பஸ்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன.
மானாமதுரையில் கடந்த 15 வருடங்களுக்கு முன் சிப்காட்டில் துவங்கப்பட்ட அரசு பஸ் பணிமனையில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதியும் இல்லாமல் இருந்து வருகிறது.தற்போது இரவு நேரங்களில் 7 பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு அதிகாலையில் மீண்டும் பல கிராமங்களுக்கு எடுத்துசெல்லப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக மானாமதுரையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பணிமனைக்குள் மழைநீர் தேங்கி சகதியுமாக காணப்படுகிறது. இரவில் பஸ்களை கொண்டு வந்து டிரைவர்கள் நிறுத்தி விட்டு அதிகாலையில் பஸ்களை எடுக்கும் போது சிரமப்படுகின்றனர். காரைக்குடி கோட்டபோக்குவரத்து துறை அதிகாரிகள் மானாமதுரை பணிமனைக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.