சமூக வலைதளத்தில் சேலம் தி.மு.க., - எம்.பி.,யை விமர்சனம் செய்த ஓமலூர் ஒன்றிய செயலாளர் | சேலம் செய்திகள் | Dinamalar
சமூக வலைதளத்தில் சேலம் தி.மு.க., - எம்.பி.,யை விமர்சனம் செய்த ஓமலூர் ஒன்றிய செயலாளர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
16:18

ஓமலூர்: சமூக வலைதளத்தில் சேலம் தி.மு.க., - எம்.பி., பார்த்திபன் பற்றி, ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விமர்சனம் செய்துள்ளதற்கு, கட்சியினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


தி.மு.க.,சேலம் மத்திய மாவட்டத்துக்குட்பட்ட ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரமேஷ், 45; கேபிள் தொழில் நடத்தி வருகிறார். சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,ராஜேந்திரனின் தீவிர ஆதரவாளர். இவர் கடந்த, அக்.,24ல், 'ஓமலூர் தி.மு.க., என்ற வாட்ஸ் ஆப் குரூப்'பில், ஒரு 'பார்வேடு மெசேஜ்' அனுப்பினார். அதில், 'எஸ்.ஆர்,பார்த்திபன் கடந்த, 3 நாட்களாக தனது முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை அகற்றியுள்ளார். போன் செய்தால் எடுப்பதில்லை. அவரது உதவியாளரும் போன் எடுப்பதில்லை. தமிழக முதல்வர் அதிகமாக திட்டிவிட்டார் என மிக வருத்தத்தில் இருக்கிறார். எம்.பி., அலுவலகத்துக்கும் வருவதில்லை. மிகப்பெரிய ஒரு மாற்றம் சேலத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம்' என பதிவிடப்பட்டிருந்தது. மேலும், எம்.பி., தனது சுய விளம்பரத்துக்காக தன்னிச்சையாக செயல்படுகிறார். கடந்த, அக்., 18ல், மாதேஸ்வரன் மலைக்கு சென்ற போது, மேட்டூரில் இருந்து அதிக வாகனங்களுடன் சென்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என, மேட்டூர் நகர நிர்வாகிகள் புகார் கடிதம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதே பதிவை நேற்று முன் தினம் இரவு, தி.மு.க.,சேலம் எம்.பி.,பார்த்திபன், தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, அதன் கீழே, 'அருமை தம்பி ரமேஷ், ஒமலூர் ஒன்றிய பொறுப்பாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்கு வாழ்த்துக்கள். தம்பி, கழக வளர்ச்சிக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் இந்த செய்தி பரப்புவதற்கு ரொம்ப போராடிகிட்டு இருக்கிறார். அவருக்கு ஏன் சிரமம்; ரமேஷுக்கு உதவலாமே என்று, நானே என் முகநூல் பக்கத்தில், அவர் சிரமப்பட்டு எழுதியதை வெளியிட்டுள்ளேன். நல்ல எண்ணத்துடன் விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழ்ச்சி அடையுங்கள்' என, பதிவிட்டுள்ளார். இதனால் அவரது முகநூல் பக்கத்தில் உள்ள தி.மு.க.,வினர் பலர், ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளவரே, கட்சியில் உள்ளடி வேலையில் ஈடுபடுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வறுத்து எடுத்துள்ளனர். அதே சமயம் எம்.பி.,யை பற்றி மிகத்துணிச்சலாக கருத்து சொல்ல ரமேஷ் போன்றவர்கள் கட்சிக்கு அவசியம் என ஒரு சிலர் வெளிப்படையாக கூறிவருவதோடு, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 6 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படியா; கட்சியில் உள்ள அதிருப்தியையும், பார்த்திபன் மீது உள்ள அதிருப்தியையும் வெட்ட வெளிச்சம்மாக்குகின்றனர் என, சேலம் மாவட்ட, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X