கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் 500 படுக்கைகளுடன், மருத்துவமனை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி, அவினாசி ரோட்டில் உள்ள சிட்ரா பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள், செயல்முறை வகுப்புகளுக்கு, தினமும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.போக்குவரத்து நெரிசல், நெடுந்துார பயணம் உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களின் வசதிக்காக, கல்லுாரியிலேயே 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது.இதற்கென, 2019ம் ஆண்டு, மருத்துவமனை சார்பில் சுகாதார துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சுகாதார துறையினர், ரூ.120 கோடியில், மருத்துவமனை கட்டுவதற்கு திட்டமிட்டனர். அதன்பிறகு, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டதால், தற்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''அரசு மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சுலபம். இந்நிலையில், புதிதாக ஒரு மருத்துவமனை கட்டி, அதில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது கடினம். மாணவர்களின் கல்விக்காக, நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றிக் கொண்டே இருக்கவும் முடியாது. மாணவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக, பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,''என்றார்.