பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள் வளர்ச்சியடைய, 20 கி.மீ., ரயில்வே பகுதிகளை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க உதவ வேண்டும், என, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பயணிகள் நலச்சங்கம் சார்பில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை - பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் இணைந்து, பொள்ளாச்சி பகுதியின் ரயில்வே பிரச்னைகள் மற்றும் தேவைகளை கையில் எடுத்து, தீர்வு பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பொள்ளாச்சியில் நடந்த தென்னை நார் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டத்துக்கு வந்த, மத்திய கயிறு வாரிய தலைவர் குப்புராமை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதிக்கு ரயில்வே சேவையை பயன்படுத்திக் கொள்வது குறித்து கூறி, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுத்தனர்.அதே போல், பா.ஜ., மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில், அகல ரயில்பாதை அமைப்புக்கு முன் செயல்பட்டு வந்த 'பிட் லைன்' வசதி, அனைத்து ரயில்வே பொறியியல் முதன்மை பணிமனைகள் மீண்டும் பொள்ளாச்சியில் நிறுவப்பட வேண்டும்.கடந்த, 2007ல் சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்ட போது, மதுரை கோட்டத்தில் இருந்து பிரித்து, பாலக்காடு கோட்டத்தில் இணைக்கப்பட்ட, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான, 20 கி.மீ., ரயில் வழித்தடத்தை, மீண்டும் மதுரை அல்லது சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்.இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், கோவை ரயில்வே சந்திப்பில் நிலவும் இட நெருக்கடி களையப்பட வாய்ப்பு கிடைக்கும். அங்கு நிறுத்தப்படும் ரயில்கள், பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டு, பொள்ளாச்சிக்கும் பல புதிய ரயில் வசதிகள் கிடைக்கும்.இதனால், கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், குறைந்த பயண துாரம் மற்றும் குறைந்த பயண நேரத்தில், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.பொள்ளாச்சி பகுதியில் இருந்து ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் நடந்து, அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. தினமும், 700க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் ஏற்றமதி பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன.திப்பம்பட்டியில் புதிய 'கன்டெய்னர் ஸ்டப்பிங்' மையம் மற்றும் 'கூட்ெஷட்' மையம் அமைக்கப்பட்டால், சரக்கு போக்குவரத்து வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கும். இந்த வசதி கிடைத்தால், ஏற்றுமதி தொழில் வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்து, வருவாயும் மேம்படும்.பொள்ளாச்சியின் தொழில் வளர்ச்சி, மக்களுக்கு அத்தியாவசியமான ரயில் சேவைகள் கிடைக்க, பாலக்காடு கோட்டம் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. இதனால், வளர்ச்சி வாய்ப்புகள் பல ஆண்டுகளாக தடைபட்டுள்ளது.கோட்டம் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, கோவை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.