கோவை: தீபாவளி பண்டிகை முடிந்த ஒரே வாரத்தில், பட்டுக்கூடு விலை சூடு பிடிக்கும் என, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டுக்கூடு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.மழைக்காலம் என்பதால், கடந்த ஒரு மாதமாக பட்டுக்கூடு விலை மந்தமாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 400 ரூபாய்க்கும், அதற்கு அடுத்த ரகம், 380 ரூபாய்க்கும் விற்பனையானது.பட்டுக்கூடு விவசாயிகள் கூறுகையில், ''மழை துவங்கிய நாளில் இருந்தே விலை சரியில்லை. இந்த மாதம் முழுவதும் ஒரு கிலோ, 420 ரூபாய்க்கு மேல் ஏறவில்லை. 500 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தால்தான், எங்களுக்கு கட்டுபடியாகும்,'' என்றனர்.பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறும் போது, 'மழைக்காலத்தில் எப்போதும் விலை இப்படிதான் இருக்கும். தீபாவளி முடிந்த ஒரே வாரத்தில், விவசாயிகள் எதிர்பார்த்த அளவு, விலை சூடு பிடிக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.