திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரோட்டோரம் உள்ள, பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன், ஏலதாரர் நியமிக்கப்பட்டு, மரம் வெட்டப்பட்டது.ஏலதாரர், அனுமதி பெற்ற மரங்களை வெட்டிய பிறகும், ரோட்டோர மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டி, வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார். மங்கலம், குமரன் கல்லுாரி அருகே, மரக்கிளைகளை வெட்டிய போது, 'வெற்றி' அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.மரம் வெட்டியது தொடர்பாக, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, ஆர்.டி.ஓ., ஜெகநாதன் உத்தரவிட்டார். தாசில்தார் ராஜகுமாரன் விசாரணை அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து, 9,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தாசில்தார் ராஜகுமாரன் கூறுகையில், ''பிரச்னைக்குரிய வகையில், மரக்கிளைகளை வெட்டிய பழனிசாமி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. வெட்டிய மரங்களுடன் இருந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பிறகு, 9,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஏலதாரர், அபராதத்தை செலுத்திவிட்டு, வாகனத்தை மீட்டுச்சென்றார்.மரம் வெட்டும் போதும், கிளைகளை வெட்டி அகற்றும் போதும், வருவாய்த்துறையில் முறையான அனுமதி பெற வேண்டும். முறையான அனுமதியின்றி கிளைகளை வெட்டினாலும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்'' என்றனர்.