திருப்பூர்: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில், சிக்கண்ணா அரசு கல்லுாரியில் இன்று மாணவ, மாணவியர் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடக்க உள்ளது.ஆண்டுதோறும் அக்., இறுதி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் நடக்கிறது. இந்தாண்டு, கடந்த 26 முதல் வரும் 31ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் இம்மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 26ம் தேதி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்று (நேற்று) அரசு அலுவலர்கள், ஊழியர்களிடையே லஞ்சம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 'ஆன்லைன்' வாயிலாக நிகழ்ச்சி நடந்தது.நாளை (இன்று) பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான, 'சுதந்திர இந்தியா -75: நேர்மையுடனான தற்சார்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடக்கிறது.சிக்கண்ணா அரசு கல்லுாரியில் நடக்கிறது. சிறந்த, மூன்று கட்டுரைகளுக்கு பரிசு வழங்க உள்ளனர். 29ம் தேதி, சமூக ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு, 30ம் தேதி, மக்கள் கூடும் இடமான, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோட்டீஸ் வழங்கப்படுகிறது.வரும் 1ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தயார் செய்யப்பட்டுள்ள குறும்படங்கள். சிறந்த மூன்று படத்துக்கு பரிசு வழங்க உள்ளனர். அன்றைய நாளில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.