திருப்பூர்: திருப்பூர் மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் பாரதிராஜா ஆகியோர், முருகம்பாளையம் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.பெரியகரை ஓடையில், பல்வேறு வண்ணங்களில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாய நீர் வந்த திசை நேக்கி, மூன்று கி.மீ., துாரம் சென்றனர். 'கவுதம் டையிங்' என்ற சாய ஆலையிலிருந்து, சாயக்கழிவுநீர் வெளியேறி, ஓடையில் கலந்தது தெரியவந்தது.சாய ஆலைக்குள் சென்று பார்த்ததில், குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து சாயநீர் பீறிட்டு வெளியேறியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், சாய ஆலையின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. விதிமீறி சாயக்கழிவுநீரை வெளியேற்றியதால், ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளனர்.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'சாய ஆலையில், குழாய் உடைத்து, சாயக்கழிவுநீர் வெளியேறியுள்ளது. இதை கண்டுகொள்ளாமல், சாயக்கழிவுநீரை தொடர்ந்து வெளியேற்றியது தவறு. ஆலையின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; மின் இணைப்பு துண்டிக்க பரிந்துரை செய்துள்ளோம்,' என்றனர்.