அன்னுார்: அன்னுார் ஒன்றியத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 16 நடுநிலை, 75 துவக்கப் பள்ளிகள் என, 91 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 4,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, வரும், 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறந்து செயல்பட உள்ளன. இதையடுத்து பள்ளி வளாகங்களில் இருந்த குப்பை அகற்றப்பட்டு துாய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, அன்னுாரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டன.பள்ளிகளில், ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நான்கு புத்தகங்களும், மூன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா ஐந்து புத்தகங்களும் அனுப்பப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே முழு ஆண்டுக்கான புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.
பள்ளிகள் துாய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் பருவ புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, வரும், 1ம் தேதி மாணவர்களுக்கான கற்பித்தல் பணி தடையில்லாமல் துவங்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.