மேட்டுப்பாளையம்: நிதி நிலைமை மோசாமாகும் சமயத்தில் மட்டும் அதிரடி காட்டும் மேட்டுப்பாளையம்நகராட்சி நிர்வாகம், 6 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க, 51 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்துள்ளது. அதிரடிக்கு பயந்து கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை செலுத்தத்துவங்கியுள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் நகராட்சிக்கு சொந்தமான, 250-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி கடைகளின் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதில், 138 கடைகளின் வியாபாரிகள் மட்டும், உயர்த்திய வாடகைக்கு ஒப்புக்கொண்டு தொடர்ந்துகடைகளை நடத்தினர்.மீதமுள்ள கடைகள், வாடகை அதிகம் காரணமாக ஏலம் எடுக்கப்படாததால், கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன.கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களில் பலர், கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் வாடகை பாக்கி என்பதால், நகராட்சி நிர்வாகம் பாக்கியை செலுத்த நோட்டீஸ் அனுப்பியும், கடை வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.சிலர், ஒரு கடையை இரண்டு, மூன்று கடைகளாக பிரித்து, உள்வாடகைக்கு விட்டு, ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் பார்க்கின்றனர்; ஆனால், வாடகை செலுத்துவதில்லை. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத், வாடகை நிலுவை வைத்துள்ளவர்களுக்கு அழைப்புவிடுத்தும், கருத்து கேட்பு கூட்டத்தில், 30 பேர் மட்டுமே பங்கேற்றனர். அப்போது, வாடகையை கட்டாயம் செலுத்துமாறு அதிகாரிகள் எச்சரித்தனர். வியாபாரிகள் அலட்சியமாக இந்தததால், முதல் கட்டமாக, கடந்த, 21ம் தேதி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், 53 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த, நான்கு கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
நேற்று, 47 கடைகள், தினசரி மார்க்கெட்டில் நான்கு கடைகள் என, 51 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.ரூ. 31.33 லட்சம் வசூல்!நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில்,''தீபாவளியை முன்னிட்டு, நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. நகராட்சிக்கு கடைகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி, 6 கோடி ரூபாய். பலமுறை கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தும், அவர்கள் வாடகை செலுத்தாது இழுத்தடித்தனர்.தற்போது, 51 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதை அடுத்து, 9 கடை வியாபாரிகள், 31 லட்சத்து, 33 ஆயிரத்து, 710 ரூபாய் வாடகை செலுத்தியுள்ளனர்; பலர் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் உடனடியாக பாக்கி செலுத்தவில்லையேல், அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,'' என்றனர்.அலட்சியம்தான்!நிதி நிலைமை மோசமானால் மட்டுமே அதிரடி காட்டும் நகராட்சி நிர்வாகம், வாடகை பாக்கி, 6 கோடி வரை உயரும் வரை வேடிக்கை பார்த்துள்ளது. நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இதுபோன்ற வருவாய் இழப்பும்தான். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடிகள் அவசியம்.