மேட்டுப்பாளையம்: காரமடை ஆதிமாதையனுார் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அடுத்து விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.காரமடையை அடுத்த ஆதிமாதையனுார், மேல்பாவி, நீலம்பதி ஆகிய பகுதிகள் வனப்பகுதி அருகே உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள், கரடி, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, மயில் என பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இறை தேடும் இந்த விலங்குகள், குடிநீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கும் வந்து செல்கின்றன.இதில், யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகளால் வாழைகள் அதிகளவில் சேதமடைகின்றன. இந்நிலையில் ஆதிமாதையனுாரில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நாய்களை சிறுத்தை பிடித்து சென்றுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஆதிமாதையனுார் விவசாயிகள், காரமடை வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினரும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்துவருவதுடன், இரவு, பகலாக கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காரமடை சரக அலுவலர் மனோகரன் கூறுகையில்,"ஆதிமாதையனுாரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, விவசாயிகள் கூறியதை அடுத்து, இரு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வனத்துறையினர் இப்பகுதிகளில் இரவு, பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.