பெ.நா.பாளையம்: துவக்க, நடுநிலைப்பள்ளிகள் வரும், 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த அறிவுரை கூட்டம் நடந்தது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ சுதா ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது, இருவரும்,'வரும், 1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்கவேண்டும். கிருமிநாசினி தெளிக்கவேண்டும். வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியன சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு, ஜன்னல்கள் நன்கு துாய்மை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி கட்டடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாத வகையில், மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியின் உட்புறம் கிருமிநாசினி கொண்டு, நன்கு சுத்தம் செய்யப்பட்டு, துாய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும்' என, அறிவுறுத்தினர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.