அன்னுார்: மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளது.அன்னுார் நகரில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்னுாரில், அ.மு., காலனி, கோவை ரோடு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், மேட்டுப்பாளையம் ரோடு, தர்மர் கோயில் வீதி உள்ளிட்ட இடங்களில், 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை துணிகளை கிழிப்பது, உணவுப்பொருட்களை சேதப்படுத்துவது, குழந்தைகளை அச்சுறுத்துவதுமாக உள்ளன.இதனால் அச்சமடைந்த மக்கள் பேரூராட்சி மற்றும் வனத்துறையில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர், அன்னூர் தெற்கு துவக்கப்பள்ளி வளாகத்தில், இரண்டு கூண்டுகளை வைத்துள்ளனர். இந்த கூண்டுகளுக்குள் பழங்கள், காய்கறிகள் வைக்கப்பட்டுள்ளன.
'இந்த கூண்டுகளில் உள்ள பழங்களை சாப்பிட, குரங்குகள் வந்து பழகிய பிறகு, கூண்டுக்குள் குரங்கு சென்று பழங்களை சாப்பிடும் போது கூண்டு தானாக பூட்டிக்கொள்ளும். அதன்பிறகு, பிடிபடும் குரங்குகள் வனப்பகுதியில் விடப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.