பட்டாசு விபத்தில் பலி 7 ஆனது பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
பட்டாசு விபத்தில் பலி 7 ஆனது பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
00:53

சங்கராபுரம்:சங்கராபுரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. கடை உரிமையாளரான பா.ஜ., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் நடத்தி வருபவர் செல்வகணபதி, 47; பா.ஜ., மாவட்ட செயலர்.தீபாவளியை முன்னிட்டு, சிவகாசியில் இருந்துபல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வரவழைத்தார். அவற்றை தன் கடைக்கு பின்னால் உள்ள குடோனில் வைத்திருந்தார்.



நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு, குடோன் தீ பிடித்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள பேக்கரியில் வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. இதில், மூன்று கடைகள் இடிந்து தரைமட்டமாகின.சங்கராபுரம், திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் நள்ளிரவு 12:00 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.



விபத்தில், செல்வகணபதியின் தாய் வள்ளி, 70 மற்றும் 22 - 75 வயதுள்ள ஐந்து ஆண்கள் என ஆறு பேர் உடல் கருகி இறந்தனர்.செல்வகணபதி உட்பட 11 பேர் படுகாயம் அடைந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



சிறுவன் உடல்



தீ விபத்தின் போது, குடோனின் பின்னால் வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அப்போது வீட்டில் இருந்த செல்வகணபதியின் உறவினர் மகன் தனபால், 11, என்ற சிறுவனை காணவில்லை. இடிபாடுகளை அகற்றி தேடும் பணி நடந்தது. நேற்று மாலை 3:00 மணியளவில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது.மேலும், பேக்கரிக்குள் வெடிக்காமல் இருந்த 16 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு கருதி ஏரியில் வீசப்பட்டன.



தீ விபத்து நடந்த இடத்தில் எஸ்.பி., ஜியாவுல்ஹக் ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், ''இந்த விபத்தில் வெடித்த வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் அதிகம் இருந்துள்ளன. ''போதிய பாதுகாப்பு வசதியின்றி குடோனில் அதிகளவு பட்டாசுகளை சேகரித்து, விபத்திற்கு காரணமான சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.



தலைவர்கள் ஆறுதல்



விபத்தில் இறந்த ஆறு பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருபவர்களை பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X