கூடலுார்:முல்லை பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற இடுக்கி காங்., - எம்.பி., டீன் குரியகோசு-க்கு, தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, தமிழக அரசு வசம் உள்ளது. சில நாட்களாக, பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கன மழை பெய்து நீர்மட்டம் 137.6 அடியை எட்டியுள்ளது. இதனால், வழக்கம்போல் கேரள அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அணை தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை கிளப்பி பூதாகாரமாக்கி வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைக்குரிய நேரத்தில், அணைப் பகுதிக்கு இரு மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் தவிர, மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ செல்ல வேண்டும் என்றால், முறையான அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, இடுக்கி காங்., - எம்.பி., டீன் குரியகோஸ் வல்லக்கடவு வழியாக அணைப் பகுதிக்கு சென்றார்.
ஜீப்பில் வந்த எம்.பி.,யால் ஷட்டர்களுக்கு முன், 137 அடிக்கு மேல் தேங்கியிருந்த தண்ணீரில் கடந்து செல்ல முடியவில்லை.மேலும், பாதுகாப்பில் இருந்த கேரளா போலீசார், தாங்கள் அணைப் பகுதிக்கு செல்வதால் பிரச்னை பெரிதாகி விடும் எனக் கூறி, திருப்பி அனுப்பி விட்டனர். ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:
இடுக்கி தொகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரியாறு அணைக்கு எதிராக பேச மாட்டேன் என வாக்குறுதி அளித்ததால், தமிழர்கள் அவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்தனர்.ஆனால், இதை மறந்து எம்.பி., அணைப் பகுதிக்கு செல்ல முயன்றது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தற்போது அணை அருகே புதிய அணை என்ற கோரிக்கையை கேரள அரசு கையில் எடுத்துள்ள நிலையில், புதிய அணை கட்டுவதற்கான இடத்தை எம்.பி., பார்வையிடச் சென்றாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.