சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று இடிபாடுகளை அகற்றும் போது 11 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. கடை உரிமையாளர் பா.ஜ. நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிறுவன் உடல்
தீ விபத்தின் போது குடோனின் பின்னால் வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அப்போது வீட்டில் இருந்த செல்வகணபதியின் உறவினர் மகன் தனபாலை 11 காணவில்லை. இடிபாடுகளை அகற்றி தேடும் பணி நடந்தது. நேற்று மாலை 3:00 மணியளவில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது.பேக்கரிக்குள் வெடிக்காமல் இருந்த 16 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி ஏரியில் வீசப்பட்டன.
நாட்டு வெடிகள்
தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆய்வு செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில் ''இந்த விபத்தில் வெடித்த வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டு உள்ளது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் அதிகம் இருந்துள்ளது. போதிய பாதுகாப்பு வசதியின்றி குடோனில் அதிகளவு பட்டாசுகளை சேகரித்து வெடி விபத்திற்கு காரணமான சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.