சென்னை-பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, 'டான்சி' ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று டான்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.கடந்த, 2015 - 16ம் கல்வியாண்டு முதல் 2017 - 18ம் கல்வியாண்டு வரையிலாக, அதிக மதிப்பெண் எடுத்த, 'டான்சி' நிறுவன ஊழியர்களின் வாரிசுதாரர்களான 19 மாணவ - மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகை வழங்கிய பின், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:டான்சி நிறுவனத்தில், இம்மாதம் வரை, 60 கோடி ரூபாய்க்கு பணி ஆணைகள் பெறப்பட்டு, உற்பத்தி நடந்து வருகிறது.பள்ளிக் கல்வித்துறையிடம், 15 கோடி ரூபாய்; இந்திய மருத்துவத் துறையிடம், 5 கோடி ரூபாய்; பழங்குடியினர் நலத்துறையிடம், 4 கோடி ரூபாய் என, மொத்தம், 24 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணைகள் பெறப்படும்.நடப்பாண்டு இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பில், உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், டான்சி தலைவர் விஜயகுமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.