திருவாலங்காடு--திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மூன்று பருவத்திலும், இந்த கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு 170 டன் வரை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.சம்பா பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகள், தற்போது நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அரசு நெல் கொள்முதல் நிலையம் இந்த ஊராட்சியில் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயி ஜெயசந்திரன் கூறியதாவது:விவசாயிகள் தற்போது, பொன்னாங்குளத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது. இதனால் எங்கள் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர்கூறினார்.