காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் நகராட்சியில் அமைந்துள்ள செவிலிமேடு ஏரி, பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரி பாசனத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது 100 ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதி குடியிருப்பு ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டம் அதிகரிக்கும். இந்த ஏரிக்கு செல்லும் கால்வாய் துார்ந்துள்ளதால், ஏரி நிரம்புவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.இப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த ஏரிக்கு, பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், பாலாற்றில் மணல் குவாரி இயங்கியபோது, நீர் வரத்து கால்வாய் அருகிலும் மணல் எடுக்கப்பட்டது.இதனால் கால்வாய் மேடாகவும், ஆறு பள்ளமாகவும் மாறியதால், தற்போது துார்ந்துள்ளது. ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சீரமைத்தால், மழைக்கால நீர் ஓடி, ஏரி நிரம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய ஏரிகள் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம், முசரவாக்கம், தண்டலம் உட்பட பல ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில், சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதனால், அந்த பகுதியில் தாமதம் ஏற்படுகிறது. அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்படும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 4,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.