கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சின்னகொட்டாம்பட்டி வெள்ளச்சிகோன் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதுடன் வரத்து கால்வாய் அழிக்கப்பட்டதால்தண்ணீரின்றி வறண்டு உள்ளது.
இக்கண்மாய்க்கு வலைச்சேரிபட்டி சீத்தாமலையில் இருந்து மலைப்பகுதியிலிருந்தும், மழை மூலமும் தண்ணீர் வரும். அதன் மூலம் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலங்களில் கடலை, நெல், பருத்தி மற்றும் தென்னை விவசாயம் நடந்தது.
தற்போது கண்மாய் நீர்வரத்து கால்வாய் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. கண்மாயினுள் சிலர் குடியிருப்புகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.சமூக ஆர்வலர் கருப்பு கூறியதாவது: நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை சுட்டி காட்டி கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கண்மாயில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக வெளியூர் செல்ல துவங்கியுள்ளனர் என்றார்.கொட்டாம்பட்டி பி.டி.ஓ., பாலசந்தர் கூறுகையில்,'' கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வெள்ளச்சிகோன் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என்றார்.