ஈரோடு: ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு, திண்டல் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் தர்மலிங்கம், கூடுதல் எஸ்.பி.,பாலாஜியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சமுதாய திட்டங்களை ஏற்படுத்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. 12 உறுப்பினர்கள் தலா, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அறக்கட்டளை பணி செய்ய முடிவு செய்தோம். சங்க மூத்த உறுப்பினர் காசியண்ணன், தன் பங்கிற்கான தொகைக்கு பதிலாக தனக்கு பாத்தியப்பட்ட பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள, 16,334 சதுர அடி காலி இடத்தை, 2012 மார்ச், 30ல் தான செட்டில்மென்ட் ஆக எழுதி கொடுத்தார். அன்று முதல் அறக்கட்டளை சுவாதீனத்தில் உள்ளது. இந்நிலையில், 2021 ஜூலை, 15ல் காசியண்ணன், தன் உறவினரான மோகன ராமகிருஷ்ணன், அவரது மனைவி தீபா ஆகியோருடன் சேர்ந்து பாக பிரிவினை பத்திரம் பதிவு செய்துள்ளார். பத்திரம் பதிவு செய்யும் முன் குடும்பத்தார், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் எந்தெந்த சொத்துக்கள் யார் யாருக்கு பாத்தியப்பட்டது என முடிவு செய்யப்பட்டது. எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான, இரண்டு கோடி மதிப்பிலான சொத்தை மோகன ராம கிருஷ்ணன், சார் பதிவாளர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கூட்டு சதி செய்து அபகரிக்க குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த செப்.,15ல் பெருந்துறை சார் பதிவாளரிடம் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற தீய நோக்கில் கூட்டு சதி செய்து, மோசடியான முறையில் பாக பிரிவினை பத்திரத்தை பதிவு செய்த மோகன ராம கிருஷ்ணன், பாண்டுரங்கன், ஜெகதீசன், பெரியசாமி, வடிவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.