பழனிசாமிக்கு 88 சதவீதம்; பன்னீர்செல்வத்துக்கு 12 சதவீதம் ஆதரவு: அ.தி.மு.க., வாட்ஸ் ஆப் குழுவில் நடந்த ஓட்டெடுப்பில் சுவாரஸ்யம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
பழனிசாமிக்கு 88 சதவீதம்; பன்னீர்செல்வத்துக்கு 12 சதவீதம் ஆதரவு: அ.தி.மு.க., வாட்ஸ் ஆப் குழுவில் நடந்த ஓட்டெடுப்பில் சுவாரஸ்யம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:04

ஈரோடு: ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., வாட்ஸ் ஆப் குழுவில், அ.தி.மு.க., பொதுச் செயலாளருக்கான தலைமை பண்பு யாருக்கு என்பது பற்றிய ஓட்டெடுப்பில், பழனிசாமிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பன்னீர்செல்வத்தை கேள்வி கேட்டு திணறடித்துள்ளனர்.


சமீபத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க.,வில் சசிகலாவை இணைப்பது குறித்து மூத்த நிர்வாகிகள் கலந்து முடிவெடுப்பர்' என, தெரிவித்திருந்தார். அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 'இரட்டை தலைமையில் அ.தி.மு.க., திறம்பட சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலும், பல இக்கட்டான சூழலிலும் அவர்கள் வழி நடத்தினார்கள். இப்போதைய நிலையில், சசிகலா, அ.தி.மு.க.,வை வழி நடத்த வேண்டிய நிலையில் இல்லை' என முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், மாவட்ட, மாநில அளவில் அ.தி.மு.க.,வினரிடையே இப்பிரச்னை விவாதப்பொருளாகியுள்ளது. ஈரோடு மாநகர மாவட்ட, அ.தி.மு.க., மற்றும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., என்ற வாட்ஸ் ஆப் குழுவில், இம்மாவட்டத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளனர். இக்குழுவில் கடந்த இரு நாட்களாக இப்பிரச்னை குறித்து கடுமையாக விவாதிப்பதுடன், 'அ.தி.மு.க.,வின் பொது செயலாளர் ஆகும் தலைமை பண்பு யாருக்கு உள்ளது' என்பது குறித்து ஓட்டெடுப்பு, கருத்து பதிவு, சிம்பல் மூலம் ஆதரவு, எதிர்ப்புகள் பதிவு செய்தனர். இறுதியாக 'பழனிசாமி - 88 சதவீதம், பன்னீர்செல்வம்- 12 சதவீதம்' என முடிவும் அறிவித்தனர். அத்துடன், பன்னீர்செல்வத்துக்கு பல கேள்வியை எழுப்பும் பதிவுகளை தொடர்கின்றனர். அப்பதிவில் கூறியதாவது:


* பன்னீர் செல்வம் அவர்களுக்கு, தொடர்ந்து இரட்டை நிலைப்பாடு எடுத்து தொண்டர்களை குழப்பாதீர்கள். சசிகலாவுக்கு ஆதரவு என்றால் அதை வெளிப்படையாக தெரிவியுங்கள். இல்லை என்றால் அதை முற்றிலுமாக மறுத்துவிடுங்கள்.


* பல்வேறு சலசலப்புகளுக்கு பிறகு கட்சி ஒரு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் வேலையில் திடீர் இரட்டை நிலைப்பாடு ஏன்!.


* அ.தி.மு.க., தொண்டர்களை குழப்பி தொய்வடைய செய்துவிட்டு, தொண்டர்களின் எதிர்பார்ப்புகளையும் சிதைத்துவிடுகிறீர்கள்.


* சசிகலாவோடு பேசியவர்களை நீக்க கையெழுத்து இட்டீர்கள்... சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா கட்சிக்கு உரிமை கோர முகாந்திரம் இல்லை என்றீர்கள்... ஆனால், இன்று மீண்டும் இரட்டை நிலைப்பாடு.


* தொண்டர்களின் நம்பிக்கையை தொடர்ந்து இழந்து வருகிறீர்கள். முன்னுக்கு பின் முரண் பேசி, பத்திரிகைகளின் பல் இளிப்புக்கு கட்சியை இரையாக்கி விடாதீர்கள்.


* அ.இ.அ.தி.மு.க., எனும் எக்கு கோட்டையை சில கரையான்கள் அரிக்க காத்து கொண்டிருக்கிறது... பாதை அமைத்து விடாதீர்கள். தொண்டர்களின் குரலுக்கு வழி மொழியுங்கள். இல்லையேல் வழிவிடுங்கள். இவ்வாறு முடித்துள்ளனர். இக்கருத்துக்கு ஆதரவாகவும், பழனிசாமியை வரவேற்றும், பன்னீர்செல்வத்தை வசைபாடியும் வாட்ஸ் ஆப் குரூப்பில் அர்ச்சனை, பன்னீர்செல்வம் போட்டோவில் மீம்ஸ்கள் வடித்து திணறடித்துள்ளனர். அந்த குழுவில் தற்போது வரை பலரும் கருத்து கூறி விவாதித்து வருகின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X