ஆத்தூர்: நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் தவித்த பெண்ணை காப்பாற்றியவரை, நடிகர் கமலஹாசன் பாராட்டினார். ஆத்தூர் அருகே, ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், கடந்த, 24ல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நைனார்பாளையத்தை சேர்ந்த, 4 மாத கர்ப்பிணி சிவரஞ்சனி, 19, அவரது அண்ணனின் குழந்தையுடன் நீர் வீழ்ச்சியின் மேற்கு பகுதியில் சிக்கிக்கொண்டார். அவரை, ஆத்தூர், புதுப்பேட்டையை சேர்ந்த, மருந்தக உரிமையாளர் அப்துல்ரகுமான், 33, காப்பாற்றினார். இதற்கு, கூலித்தொழிலாளி சண்முகம் உதவினார். இவர்களை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். நேற்று, மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசன், அப்துல்ரகுமானை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'துணிச்சலாக சென்று காப்பாற்றியதற்கு நன்றி. உங்களை போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கட்சிக்கு ஆள் சேர்க்கவில்லை; நாட்டிற்காக ஆள் சேர்க்கிறேன்' என, கமலஹாசன் பேசினார். அப்துல்ரகுமான், 'உங்கள் நேரத்தை செலவிட்டு பேசியது மகிழ்ச்சி' என்றார்.