சேலம்: டாஸ்மாக் கடை அருகே, மளிகை கடை ஊழியர் இறந்து கிடந்ததால், கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கஞ்சிரங்குடியை சேர்ந்தவர் சம்சுதீன், 45. இவர், குடும்பத்துடன், சேலம், சேலத்தாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தார். சூரமங்கலம் உழவர்சந்தை அருகே உள்ள ஒரு மளிகை கடையில் பணிபுரிந்த அவர், நேற்று முன்தினம், மூன்று ரோடு ஜவஹர் மில்லை ஒட்டிய டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். நேற்று காலை, அந்த கடையில் இருந்து, 200 மீ., தூரத்தில், அவர் தலையில் கல் இருந்தபடி இறந்து கிடந்தார். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, கல்லை போட்டு யாரேனும் கொன்றனரா என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.