பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சாய ஆலை சங்க நிர்வாகிகளை, பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாதந்தோறும் பணம் கேட்டு மிரட்டுவதால் மன வேதனையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாய ஆலை உரிமையாளர் சங்கம் உள்ளது. தலைவராக கடந்த, ஜூன், 23ல் கிருஷ்ணராஜ், செயலாளராக தங்கமணி, பொருளாளராக செங்கோட்டையன், துணை தலைவராக சிவக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள், பெதக்காட்டூர் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். சாய ஆலை மீது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளரை அழைத்து எச்சரிக்கையும் செய்து வந்தனர். இந்நிலையில், நிர்வாகிகள் கடந்த ஓரிரு வாரங்களாக சங்க நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியுள்ளதாகவும், அனைவரும் ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து, சங்க தலைவர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: விதிமுறைகள் மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது புகார் வரும் போது, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சரிசெய்யும் படி கூறுகிறோம். அவர்கள் தங்களின் தவறுகளை மறைப்பதற்காக, சங்க நிர்வாகிகள் மீது முறைமுகமாக புகார் அளிக்கின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூறுகிறோம். அதை அவர்கள் தப்பாக நினைக்கின்றனர். அடுத்தது, பல அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாதந்தோறும் பணம் தரவேண்டும். இல்லையெனில் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அதிகாரியின் மீதே புகார் அனுப்புவோம் என, மிரட்டுகின்றனர். இது எல்லாத்தையும் மீறி அரசியல் தலையீடும் உள்ளது. நிர்வாகிகள் என்ற முறையில் தேவையில்லாமல் எங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தீபாவளிக்கு பிறகு சங்க கூட்டம் நடக்கும். அதில் ராஜினாமா செய்யவது பற்றியும், எங்களை விட சிறப்பாக செயல்படுவர்களுக்கு வாய்ப்பு தரலாம் எனவும் யோசனையில் உள்ளோம். இவ்வாறு கூறினார்.